

தெலங்கானா மற்றும் டெல்லியைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 3 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் இருந்த நிலையில் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர்கள் நோயிலிருந்து குணமடைந்தனர். இப்போது முதல் முறையாக டெல்லி, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 2,900 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இரு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். டெல்லியிலும் சண்டிகரிலும் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், "புதுடெல்லி, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார். இரு நோயாளிகளின் உடல் நிலையும் சீராக இருக்கிறது. அவர்களின் உடல் நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அறிய 011-23978046 எனும் உதவி எண்ணும், ncov2019@gmail.com என்ற மின்னஞ்சலும் வழங்கப்பட்டுள்ளன.