

டெல்லி கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவையும் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே நடந்த வகுப்புக் கலவரத்தில் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பான விவகாரத்தை மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். காங்கிரஸ் எம்.பி.க்கள் அவைக்குள் கைகளில் கறுப்புக்கொடி ஏந்தியும், அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியும் வந்திருந்தனர்.
மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லி கலவரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரினார். அதற்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா சம்மதிக்கவில்லை. இதையடுத்து, உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டதால், சபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசுகையில், "கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே, இப்போது பிரச்சினை செய்கிறீர்கள். இந்த மனநிலையைக் கடுமையாக கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோனியா காந்தி பங்கேற்ற கூட்டத்தில் இறுதிவரை போராடு என்ற கோஷத்தைச் சுட்டிக்காட்டி பாஜக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால், ஆளும் கட்சி எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோஷமிட்டதால், அவையில் சலசலப்பு ஏற்பட்டு அவையை நண்பகல் வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
அதன்பின் பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போது அவைத்தலைவர் ஓம் பிர்லா முன் சென்று காங்கிரஸ் எம்.பி.க்கள் பதாகைகளுடனும், கொடியுடனும் சென்று அமித் ஷாவை ராஜினாமா செய்யக் கோரி கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த பாஜக எம்.பி.க்கள் காங்கிரஸ் எம்.பி.க்களை நோக்கி வேகமாக வந்தனர். இரு தரப்பினரும் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அவை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் நிலவியதால், நாள் முழுவதும் மக்களவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஒம் பிர்லா அறிவித்தார்.
இதேபோல மாநிலங்களவையில் அலுவல்கள் தொடங்கியதும் டெல்லி வன்முறை தொடர்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி எம்.பி.க்கள் தனித்தனியாக கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் நின்று போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சசி தரூர் உள்ளிட்டோர் கையில் பதாகைகளை ஏந்தி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். காங்கிரஸ் எம்.பி.க்கள் கையில் இந்தியாவைப் பாதுகாப்போம், பிரதமர் பதில் அளிக்க வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் இருந்தன.
அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் பேசுகையில், "டெல்லி பற்றி எரிந்தபோது, அகமதாபாத் நிகழ்ச்சியில் நமது உள்துறை அமைச்சர் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சி நல்லபடியாக நடந்தது. ஆனால், இந்தியர்கள் கொல்லப்பட்டார்கள். டெல்லி கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். கலவரம் நடந்த பின் 3 நாட்களுக்குப் பின் பிரதமர் மோடி பேசினார். இதுவரை உள்துறை அமைச்சர் எதுவும் பேசவில்லை. அஜித் தோவல் மட்டும் டெல்லிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். டெல்லியில் என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில், " உள்துறை அமைச்சரின் கீழ் சட்டம்-ஒழுங்கு இருப்பதால், அதைப் பராமரிக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. தனது கடமையைச் செய்யாத உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். 56 இன்ச் மார்பு கொண்ட பிரதமர் எங்கே சென்றார். டெல்லி கலவரத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார். ஏராளமான மக்கள் இறந்தும் என் பிரதமர் மோடி பேச மறுக்கிறார். அவையில் அவர் பதில் அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.