Last Updated : 02 Mar, 2020 03:09 PM

 

Published : 02 Mar 2020 03:09 PM
Last Updated : 02 Mar 2020 03:09 PM

நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி: பவன் குமார் கருணை மனுத் தாக்கல்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நிலையில், அதை நிறுத்திவைக்கக் கோரி குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை டெல்லி விசாரணை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே குற்றவாளிகளில் 4-வது நபரான பவன் குமார் குப்தாவின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் இன்று கருணை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்தது.

ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதியின்படி, குற்றவாளிகள் 4 பேருக்கும் (நாளை) மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றம் 3-வது டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

தூக்கு தண்டனை குற்றவாளிகளில் பவன் குமார் குப்தா தவிர மற்ற மூவர்களான அக்சய் குமார் சிங், வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.

உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே குற்றவாளி அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா இருவரும் தங்களின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், டெத் வாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும், தங்கள் தரப்பு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

டெல்லி நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜரானார். அப்போது நீதிபதி தர்மேந்திர ராணா, மனுதாரர்கள் மனுவைப் பரிசீலித்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முடியாது, தண்டனையை நிறுத்திவைக்க முடியாது எனக் கோரி தள்ளுபடி செய்தார்

அப்போது வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறுகையில், "பவன் குமார் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்திருக்கிறோம். ஆதலால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். ஆனால், நீதிபதி தர்மேந்திர ராணா தண்டனையை நிறுத்த வைக்க மறுத்துவிட்டார்

நீதிமன்றம் மீது நம்பிக்கை

நீதிமன்ற வளாகத்தில் இருந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நிருபர்களிடம் கூறுகையில், "குற்றவாளிகள் 4 பேரும் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துகிறார்கள். இந்திய நீதித்துறையின் மீதும், அந்த அமைப்பு மீதும் எனக்கு அளப்பரிய நம்பிக்கை இருக்கிறது. நாளை 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

சட்டவிதி என்ன சொல்கிறது?

சீராய்வு மனுத் தாக்கல் செய்தால், அந்த மனு விசாரிக்கப்பட்டு அதன் முடிவு வந்தபின், அடுத்த ஒருவாரத்துக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்ற சட்டவிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. பவன் குப்தாவின் சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டதால், அடுத்த ஒருவாரத்துக்கு தண்டனை நிறுத்தப்படுமா? என்பது தெரியவில்லை.

அதேபோல, குடியரசுத்தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்துவிட்டால், அந்த மனுவின் மீது முடிவு எடுக்கும் வரையும், முடிவு எடுத்தபின், அடுத்த 15 நாட்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்ற சட்டவிதி இருக்கிறது. இந்த இரு விஷயங்களையும் மீறி நாளை தண்டனை நிறைவேற்றப்படுமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x