Last Updated : 08 Aug, 2015 08:18 PM

 

Published : 08 Aug 2015 08:18 PM
Last Updated : 08 Aug 2015 08:18 PM

போட்டியே குறுகிய மனப்பான்மையை உருவாக்குகிறது: நோபல் புகழ் கைலாஷ் சத்யார்த்தி

மும்பை ஐஐடி-யின் 53-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய நோபல் பரிசு வென்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி மாணவர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கினார்.

குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி மாணவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை வழங்கினார்.

எலெக்ட்ரிகல் என்ஜினியராக பயிற்சி பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, மாணவர்கள் தங்களது பொறியியல் பின்னணியைக் கொண்டு ஆராய்ந்து முடிவெடுக்கவும், புதிய அணுகுமுறையையும் சிந்திக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே இருக்கும் அமைப்பின் மீது குருட்டு நம்பிக்கை வைக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

"நாட்டின் பிரகாசமான மூளைகளில் நீங்களும் இருக்கிறீர்கள். நீங்கள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள், வாழ்வின் பல்வேறு துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறவர்கள் நீங்களே. உலக குடிமகன்களாக இருக்க ஆசை கொள்ளுங்கள்.

போட்டியே குறுகிய மனப்பான்மையை உருவாக்குகிறது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கையில் சிறந்த லட்சியங்களை உங்களுக்கு நீங்களே அமைத்துக் கொள்ளுங்கள்.

புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் உங்கள் விருப்பம் ஒரு புறம் இருக்க, உலகம் நன்முறையில் விளங்க நீங்கள் எவ்வாறு சிறப்புற பங்களிப்பு செய்ய முடியும் என்ற கனவும் உங்களுக்குள் இருப்பது அவசியம்.

நீங்கள் உங்கள் நலனுக்காக மட்டுமே சுயநல நோக்குடன் சிந்தித்தால் நீங்கள் உங்கள் இலக்குகளை எட்டிவிடலாம் ஆனால், வாழ்க்கையில் நிம்மதியாக வாழமுடியாது. எனவே உலகம் சிறப்புற விளங்க வேண்டும் என்ற கனவை நீங்கள் கொண்டிருந்தால் நீங்கள் உலகை வழிநடத்தலாம். கனவு காணுங்கள், கண்டுபிடியுங்கள், செயலில் ஈடுபடுங்கள்.

உங்கள் இதயம் என்ன கூறுகிறதோ அதனைப் பின்பற்றினால் உங்கள் சிந்தனையும் அதனை பின் தொடரும்” என்று கூறிய இந்த குழந்தைகள் நல, நோபல் பரிசு வென்ற, சமூக ஆர்வலர் தனது உதாரணத்தை முன்வைத்தார்:

“நான் பள்ளிப்படிபைத் தொடங்கிய போது, பள்ளிக்கு வெளியே என் வயதுடைய சிறுவன் ஒருவர் செருப்பு செப்பனிடும் வேலையைச் செய்து வந்தார். ஏன் அந்தப் பையன் பள்ளிக்குள் இல்லை என்று நான் வினவியபோது, ‘ஏழை குழந்தைகள் வேலை செய்ய வேண்டும்’ என்றனர்.

நான் இந்த வாதத்தை ஏற்க மறுத்தேன். பிற்பாடு எனது பொறியியல் கரியரை மறுத்து இந்த நவீன கால அடிமை முறைக்கு சவால் ஏற்படுத்தவும், மாற்றம் கொண்டு வரவும் விழைந்தேன். விலங்குகளை விடவும் குறைந்த விலையில் சிறுவர் சிறுமிகளை வாங்குவதும் விற்பதும் எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்றார் கைலாஷ் சத்யார்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x