

கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் 165 பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நீமுச் என்ற இடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் ரயில்களில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில் கூறியிருப்பதாவது:
2017 முதல் 2019 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஓடும் ரயில்களிலும் ரயில் நிலைய வளாகங்களிலும் மொத்தம் 165 பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்துள்ளன. 2017-ம் ஆண்டு 51, 2018-ல் 70, 2019-ல் 44 பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. இவை தவிர, கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 1,672 கிரிமினல் குற்றங்கள் நடந்துள்ளன. இவற்றில் 802 குற்றங்கள் ரயில் நிலைய வளாகங்களிலும் 870 குற்றங்கள் ஓடும் ரயில்களிலும் நடந்துள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.