

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த 6 நாட்களாக அலிகரில் உள்ள ஜிவான்கர் பைபாஸ் சாலையில் போராடி வந்த பெண்கள் நேற்று கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் காவல் துறை கண்காணிப்பாளர் முனிராஜ் நேற்று கூறுகையில், “போராட்டத்தை முடிக்கும் வேளையில் ஐந்து கோரிக்கைகள் கொண்ட மனுவை மாவட்ட ஆட்சியரிடம் போராட்டக்காரர்கள் சமர்ப்பித்தனர். அதில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜிவான்கரைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்” என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக் களத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தாரிக் முனாவர் என்பவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தால் முனாவரின் கால் பகுதி செயலிழந்துவிட்டது. அவருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
போராட்டக் களத்தில் கூடியிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய துணை டிஐஜி அஜய் ஆனந்த் கூறுகையில், “அமைதி வழி போராட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஈத்கா மைதானத்தில் நடைபெற்று வருவதால் இங்கு கூடி இருக்கும் பெண்கள் அங்கு அவர்களுடன் போராட்டத்தில் இணைந்து கொள்ளலாமே என்ற ஆலோசனையை வழங்கினோம். இதன் மூலம் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும் என்று நினைத்தோம்” என்றார். - பிடிஐ