

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த துணை மருத்துவ மாணவி நிர்பயா (மாற்றப்பட்ட பெயர்) கடந்த 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் சிறுவன் என்பதால் சீர்நோக்கு பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
இதையடுத்து, குற்றவாளிகள் நால்வருக்கும் 2013-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. எனினும், பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இந்த சூழலில், அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான வாரண்ட்டுகள் கடந்த மாதம் இரண்டு முறை பிறப்பிக்கப்பட்டன. ஆனால், குற்றவாளிகள் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தியதால் அவர்களை தூக்கிலிடுவது தள்ளிப்போனது.
இதன் தொடர்ச்சியாக, குற்றவாளிகள் அனைவரையும் வரும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான பணிகளை திஹார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் 1996-ம் ஆண்டு பிறந்தேன். இதற்கான சான்றிதழ்களும் என்னிடம் உள்ளன. அதன்படி பார்த்தால், குற்றம் நடந்தபோது எனக்கு 16 வயதே நிரம்பியிருந்தது. எனவே, எனது வயதை கருத்தில்கொண்டு எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவானது நீதிபதிகள் என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.பானுமதி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இதேபோல், தங்களை மார்ச் 3-ம் தேதி (நாளை) தூக்கிலிடுவதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்யுமாறு நிர்பயா குற்றவாளிகள் பவன் குப்தா மற்றும் அக் ஷய் குமார் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் மற்றொரு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதும் நாளை விசாரணை நடத்தப்படுகிறது. - பிடிஐ