

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். டெல்லி கலவரம் தொடர்பாக மத்திய அரசையும், பாஜகவையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்தநிலையில் நாளை டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்தி, வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தக் கோரி இந்து அமைப்புகள் சில எதிர் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதையடுத்து ஷாகின் பாக் பகுதியில் டெல்லி போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.