சிக்கன் தவிர்த்த உ.பி.மக்கள்: கரோனா பீதியைப் போக்க சிக்கன் மேளா; ரூ.30க்கு தட்டு நிறைய கோழி பிரியாணி

சிக்கன் மேளாவில் ஆர்வத்தோடு கோழிபிரியாணி சாப்பிடும் உ.பி. மக்கள்
சிக்கன் மேளாவில் ஆர்வத்தோடு கோழிபிரியாணி சாப்பிடும் உ.பி. மக்கள்
Updated on
1 min read

கரோனா வைரஸ்மூலம் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுவருவதாக உலாவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ரூ.30 ரூபாய்க்கு கோழி பிரியாணியை உத்தரப் பிரதேச கோழி பண்ணை சங்கம் வழங்கி அசத்தியது.

சீனாவிலிருந்து பரவிவரும் கரோனா வைரஸ் தொற்றுநோய் உலகின் பலநாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் 2900 பேருக்கும் மேலானவர்களை இந்நோய் பலிவாங்கியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று மனிதர்களுக்கு மட்டுமின்றி பறவைகளுக்கும் பரவிவருவதாக வாட்ஸ்அப்பில் தகவல்கள் பரிமாற்றப்பட்டு வருகின்றன.

இது முற்றிலும் வதந்தி என்று உ.பி.கோழிப்பண்ணை சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக இச்சங்கம் சிக்கன் மேளாவை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்மூலம் சிக்கன் தட்டுநிறைய ஒரு பிளேட் ரூ.30 வழங்கியுள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டதாக சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கோரக்பூர் ரயில் நிலையத்தின் முன் நடைபெற்ற இந்த சிக்கன் மேளாவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து உ.பி.கோழிப்பண்ணை சங்கத் தலைவர் வினீத் சிங் கூறியதாவது:

கரோனா வைரஸ் காய்ச்சல் பரவிவருவதாக பரப்பப்பட்ட பொய்யான தகவல்களை நம்பி உ.பி மக்கள் கடந்த ஒரு மாத காலமாக கோழிக்கறியை சாப்பிடாமல் தவிர்த்து வருகின்றனர். கோழிக்கறி சாப்பிட தயங்கும் மக்களின் அச்சகத்தை போக்க வேண்டியது எங்கள் கடமை என நினைத்தோம்.

இதற்காக சிக்கன் மேளாவை ஏற்பாடு செய்துள்ளோம். இதன்மூலம் மக்களுக்கு கோழி பிரியாணியை ரூ.30க்கு வழங்கி அவர்களை மீண்டும் சாப்பிட வைக்க திட்டமிட்டோம். இதற்காக ஆயிரம் கிலோ கோழி சமைத்தோம். இதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. எங்கள் முயற்சியில் ஓரளவும் வெற்றியும் கிடைத்தது.

கோரக்பூர் ரயில் நிலையத்தின் முன் நடைபெற்ற இந்த சிக்கன் மேளாவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியதால் ரயில் நிலையத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து மணிக்கணக்கில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இவ்வாறு உ.பி. கோழிப்பண்ணை சங்கத் தலைவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in