

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் கொண்டுவருவது தொடர்பான மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு வங்கிகளின் பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
தற்போது நாட்டில் 1,540 கூட்டுறவு வங்கிகளும், 8.60 கோடி டெபாசிட்தாரர்களும், ரூ.5 லட்சம் கோடி சேமிப்புத் தொகையும் உள்ளது. இதை பாதுகாக்கும் பொருட்டு இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்துவிட்டதால், நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் இந்த மசோதா தாக்கலாகும் எனத் தெரிகிறது.
வங்கி தொடர்பான சீர்திருத்தங்கள், தனியார், அரசு வங்கிகள் சீரமைப்பு, நிதி நிறுவனங்கள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள், வீ்ட்டு வசதி கழகம் ஆகியவற்றில் சீரமைப்பு செய்யப்பட்டபின் கடைசியாகக் கூட்டுறவு வங்கியில் செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக வங்கி டெபாசிட் செய்த மக்களுக்கு டெபாசிட் மீதான காப்பீடு தொகை ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிகளைப் பொறுப்புள்ளதாக மாற்றவும், மக்களுக்கு உரியவகையில் பதில் அளிக்கும் முறையில் கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 5ஆண்டுகளில் வங்கிகளுக்கு மறுமுதலீடாக ரூ.4 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வராக்கடனின் அளவும் குறைந்துள்ளது, சொத்துக்கள் மதிப்பு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் 21 வங்கிகளில் 19 வங்கிகள் இழப்பில் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 18 வங்கிகளில் 12 வங்கிகள் லாபத்தை ஈட்டியுள்ளன. வாராக்கடன் அளவு குறைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன