

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்குகிறது, டெல்லி கலவரம், அமித் ஷா ராஜினாமா ஆகியவற்றைக் கிளப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனல் பறக்கும் விவாதங்களில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. முதல் அமர்வு 11 நாட்கள் நடந்து கடந்த 11-ம் தேதியுடன் நிறைவுற்றது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்குகிறது. டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி இருஅவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க நாளை நோட்டீஸ் அளிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் " டெல்லி கலவரம் தொடர்பாகவும், ஏன் கலவரம் வெடித்தது தொடர்பாகவும் நாளை விவாதிப்போம். மத்திய அரசு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. போலீஸ் அதிகாரிகளுக்கும், சமூக விரோதிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கிறது, அதனால்தான் கொடூரமான கொலைகளைச் செய்து உலகளவில் நமது தேசத்தின் பிம்பத்தை சிதைக்கிறார்கள். இது மிகவும் கவலைக்குரிய ஒன்று. அதேசமயம், அமித் ஷா ராஜினாமாவையும் தொடர்ந்து வலியுறுத்துவோம்" எனத் தெரிவித்தார்
மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் சிங்வி கூறுகையில் " டெல்லி கலவரம் தொடர்பான விவகாரத்தை காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் எடுத்து கடுமையாக விவாதிக்கும். ஜனநாயக மதிப்புகளைச் சிதைப்பது குறித்தும், பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளை விவாதிப்போம்" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து எதிர்க்கட்சிகளும் டெல்லி கலவரம் விவகாரத்தை இரு அவைகளிலும் நாளை எழுப்புவார்கள், அமித் ஷா ராஜினாமாவை வலியுறுத்துவார்கள் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாளை நாடாளுமன்றம் தொடங்கியதிலிருந்து அனல் பறக்கும் விவாதம், அமளிகளை எதிர்பார்க்கலாம். இதுதவிர அதிபர் ட்ரம்ப் வருகை, மூன்றாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சிக் குறைவு, வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட விவகாரங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள் எனத் தெரிகிறது