

12-ம் வகுப்பு மாணவர்கள் பிட் அடித்து தேர்வில் வெற்றி பெறுவதற்காகப் பள்ளி கிளார்க் ஒருவர் தனது வீட்டையேயே மினி தேர்வு மையமாக மாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் தியோரியா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பள்ளியின் கிளார்க் உள்ளிட்ட 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். வீட்டில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் சிலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பெரும்பாலும் கல்வியறிவில் பின்தங்கிய மாநிலமாகக் கருதப்படுகிறது. கடந்த காலங்களில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடாகத் தேர்வு எழுவதும், பிட் அடித்து எழுதுவதும் அதிகரித்து வந்தது.
ஆனால், யோகி ஆதித்யநாத் முதல்வராக வந்தபின், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து, கடும் கெடுபிடிகளைக் கொண்டுவந்தார். இதனால் தேர்வுக்குப் பயந்து மாணவர்கள் பலர் வராமல் இருப்பது அதிகரித்து வருகிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உ.பி.யில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதில் மொத்தம் 56 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்தார்கள். முதல் நாளில் தேர்வு எழுத 2 லட்சத்து 39 ஆயிரத்து 133 மாணவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது
தியோரியா நகரில் ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்யக்கூடாது என்பதற்காக கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். அதையும் மீறி பள்ளியின் கிளார்க் சிலரின் துணையுடன் தனது வீட்டில் மினி தேர்வு மையத்தையே நடத்தியுள்ளார்
தேர்வு நடக்கும் தனியார்ப் பள்ளிக்கு அருகேதான் அந்த பள்ளியின் கிளார்க் வீடும் இருக்கிறது. தேர்வின் போது வழங்கப்படும் சீல் வைக்கப்பட்ட எழுதப்படாத தேர்வுத் தாள்களை தனது வீட்டில் இந்த கிளார்க் எடுத்து மறைத்து வைத்துள்ளார்.
12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாண, மாணவியர் தேர்வு சரியாக எழுதவில்லை என்றால், அந்த மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தனது வீட்டுக்கு வரவழைத்து மறு தேர்வு எழுத வைத்து அந்த தேர்வுத்தாளை பள்ளியில் உள்ள தேர்வுத்தாளோடு இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த முறைகேடு குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவத்தன்று போலீஸார் அந்த கிளார்க் வீட்டுக்குள் சென்றபோது அங்கு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஏராளமான மாணவர்கள் கேள்வித்தாளை வைத்துக்கொண்டு, தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் என்ன எழுதுகிறீர்கள் என போலீஸார் கேட்டபோது, தவறான கணக்குகளைச் சரி செய்கிறோம் என பதில் அளித்தனர். போலீஸார் அங்கு நடந்த அனைத்து சம்பவங்களையும் வீடியோவாக பதிவு செய்தனர்.
இந்த முறைகேட்டில் தேர்வு நடந்த பள்ளியில் பணியாற்றும் கிளார்க்கிற்கு, வேறு பள்ளியைச் சேர்ந்த அலுவலர்கள் சிலரும் உதவியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த பள்ளியின் கிளார்க் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்துள்ளோம்.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களின் பெயர் வெளியிடப்படவில்லை" எனத் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் தற்போது நடந்து வரும் பொதுத் தேர்வில் 938 தேர்வு மையங்கள் பதற்றமானவே என்றும், 395 மையங்கள் அதிக பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. அந்த தேர்வு மையங்களில் தீவிரமான கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு இருந்தபோதிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன.
உத்தரப்பிரதேச அரசு முதல்முறையாக, ட்வி்ட்டரில் யாரேனும் தேர்வு ரீதியாகப் புகார் அளித்தால் உடனுக்குடன் பதில் அளித்து, அதைக் களைந்தபின் புகார் அளித்தவர்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தையும் தெரிவிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.