

உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்தது. இதையடுத்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அருகிலுள்ள பங்கார்மாவு தொகுதியைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017-ம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, குல்தீப் சிங் செங்கார் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார்.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததால், எம்எல்ஏ செங்கார் கைது செய்யப்பட்டார். அவரைக் கட்சியில் இருந்தும் பாஜக தலைமை நீக்கியது. குல்தீப் சிங் செங்கார் மீது போக்ஸோ சட்டம், பலாத்காரம், ஆள்கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.
இதனிடையே சிறுமியின் தந்தை மர்மமாக இறந்த வழக்கு விசாரணையில் தற்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டில் பாதிப்புக்குள்ளான சிறுமி, போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை திரும்பப் பெறக்கோரி சிறுமியின் தந்தை பப்பு சிங்கை எம்எல்ஏ குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள், கடுமையாக தாக்கினர்.
சிபிஐ விசாரணை
ஆனால், அங்கு வந்த போலீஸார், செங்காரின் ஆதரவாளர்களைக் கைது செய்யாமல் தாக்குதலில் படுகாயமடைந்த பப்பு சிங்கை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறைக்குள் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி பப்பு சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கிலும் எம்எல்ஏ குல்தீப் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு விசாரணை டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
55 சாட்சியங்கள்
சிபிஐ தரப்பில் 55 சாட்சியங்களும், பிரதிவாதி தரப்பில் 9 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். சிறுமியின் மாமா, தாய், தங்கை, தந்தையுடன் பணிபுரிந்த நண்பர் ஆகியோரின் வாக்குமூலங்களையும் நீதிமன்றம் பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை வரும் புதன்கிழமை நீதிபதி தர்மேஷ் ஷர்மா தள்ளிவைத்தார். - பிடிஐ