இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க பாஸ்போர்ட் கட்டாயம் அல்ல: உயர் நீதிமன்றம்

இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க பாஸ்போர்ட் கட்டாயம் அல்ல: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

கொல்கத்தா: இந்தியக் குடியுரிமைக்கு வெளிநாட்டினர் விண்ணப்பிக்க பாஸ்போர்ட் கட்டாயம் அல்ல என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது தொடர்பாக பிஸ்மில்லா கான் என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “இந்தியக் குடியுரிமைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பாஸ்போர்ட் கட்டாயமாக உள்ளது. என்னிடம் பாஸ்போர்ட் இல்லாததால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதன் மூலம் எனக்கு இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அவரது வழக்கறிஞர் வாதிடும்போது, “பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான பக்தூன் பகுதியை சேர்ந்தவர் பிஸ்மில்லா கான். பக்தூனில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து அதன் ஒரு பகுதி பாகிஸ்தானிலும் மற்றொரு பகுதி ஆப்கானிஸ்தானிலும் இணைக்கப்பட்டது. இந்தச் சூழலில் பிஸ்மில்லா கான் 1973-ல் 5 வயது சிறுவனாக தனது தந்தையுடன் இந்தியா வந்துள்ளார்” என்றார். இந்த வழக்கில் நீதிபதி சப்யசச்சி பட்டாச்சார்யா தனது தீர்ப்பில், “வெளிநாட்டினர் பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். என்றாலும் அதற்கு ஏற்கத் தகுந்த காரணத்தை அவர் கூறவேண்டும். இந்த உத்தரவுக்கு ஏற்றபடி விண்ணப்ப நடைமுறை மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in