

உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன், ஹரித்துவார், உத்தம்சிங் நகர் மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடந்த 35 ஆண்டுகளாக சனிக்கிழமைகளில் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய சட்டத்துறை ஆணையம் 2012 முதல் 2016 வரை இதுதொடர்பாக விசாரணை நடத்தியது. இதையடுத்து டேராடூன் மாவட்ட வழக்கறிஞர்கள் 455 நாட்களும், ஹரித்துவார் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 515 நாட்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.
இதுதொடர்பாக பொது நல மனு உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து உத்தராகண்ட் மாநில வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் வழக்கறிஞர் தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது தங்களது அடிப்படை உரிமை என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பொதுமக்கள் மற்றும் ஒட்டுமொத்த நீதித்துறையை பாதிக்கும் வகையில் வழக்கறிஞர்களின் பேச்சு சுதந்திரம் இருக்கக்கூடாது. போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மற்றவர்களின் உரிமையை யாரும் மீறக்கூடாது. நீதிமன்றத்தில் போராட்டம் அல்லது புறக்கணிப்பை நியாயப்படுத்த முடியாது. அதற்கு அரசியலமைப்புச் சட்டம் அனுமதி தரவில்லை.
வேலைநிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது இந்திய பார் கவுன்சிலும், மற்ற மாநில பார் கவுன்சில்களும் நடவடிக்கை எடுக்காதது சரியல்ல. எனவே அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இது பார் கவுன்சில்களின் கடமையாகும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.