

மத்திய அரசின் மிகப்பெரிய தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் அழிந்துவருகிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி, மக்கள் கையில் பணப்புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது..
நடப்பு நிதியாண்டில் 3-வது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீதமாகக் குறைந்தது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சிக் குறைவாகும்.அது மட்டுமட்டாமல் தொடர்ந்து 7-வது காலாண்டாகப் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருகிறது.
ஆனால், பொருளாதாரம் வளர்ச்சி வரும் என்று ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது.அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான ஆனந்த் சர்மா டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவது எங்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. வேலையின்மையால் சமூகத்தில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்பட்டு, நிலைத்தன்மையும், அமைதியும் பாதிக்கிறது. நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காததால், நம்பிக்கையற்று, சோர்ந்து இருக்கிறார்கள்.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் அதிகப்படுத்த வேண்டும். 100 நாட்கள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். மக்களுக்கு ரூ.500 நாள்தோறும் கூலியாக வழங்கி, மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமானதால், பொருளாதாரத்தில் தேவை அதிகரித்து வளர்ச்சியை நோக்கிச் செல்லும்.
ஆனால், மத்திய அரசு தன்னுடைய மிகப் பெரிய தவறான நிர்வாகத்தால் பொருளாதாரத்தை அழித்து வருகிறது, இன்னும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்க மறுக்கிறது.
நாட்டு மக்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது எனும் வேலைவாய்ப்பு புள்ளிவிவரத்தை மத்திய அரசு நேர்மையாக வெளியிட வேண்டும். தவறான புள்ளிவிவரங்களை வழங்கி மக்களைத் தவறாக நடத்தக்கூடாது.
தேசிய புள்ளிவிவரங்கள் வெளியிட்ட ஆய்வுகளின்படி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாகக் குறைந்துளளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகும்.
கடந்த 7 காலாண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியை நோக்கிச் சென்று வருவது மிகப்பெரிய கவலையளிக்கும் விஷயம். இன்னும் இந்தியாவின் இயல்பான பொருளாதார வளர்ச்சி ஒற்றை எண் வடிவத்திலேயே இருக்கிறது.
பணவீக்கத்தை உள்ளடக்கி 7.7 சதவீதம் இயல்பு பொருளாதார வளர்ச்சி இருந்தால், உண்மையான வளர்ச்சி என்னவாக இருக்கும், எங்கே உண்மையான வளர்ச்சி. பாதுகாப்பு, பொதநிர்வாகம், உள்ளிட்ட சேவைகளுக்குச் செலவு செய்யும் தொகையை எடுத்து விட்டு கணக்கிட்டால், உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது 3.7 சதவீதம் மட்டுமே.
மூன்றாவது காலாண்டில் பொருளாதார புள்ளிவிவரங்கள் ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், பண்டிகை காலத்தில் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் போது வளர்ச்சி ஏற்படும். ஆனால், இந்த முறை மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது, பண்டிகை காலத்தில்கூட மக்களிடம் செலவு செய்யப் பணமில்லை.
முதலீடு 9.2 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை மிகப்பெரிய அளவிலும், வருவாய் பற்றாக்குறை சமாளிக்க முடியாத அளவிலும் இருக்கிறது. ஜிஎஸ்டி மற்றும் வருமானவரியைக் கணக்கிட்டால் வரவருவாய் குறைவாக இருக்கிறது. பட்ஜெட்டில் கணக்கீட்டில் மறைமுக வரி வருவாய் ரூ.26 லட்சம் கோடி நடப்பு நிதியாண்டில் வசூலாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், டிசம்பர் மாதம் வரை ரூ.11 லட்சம் கோடி மட்டுமே வந்துள்ளது.
இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்