

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ் சார்ந்த அமைப்பின் புகாரின் பேரில் டெல்லி வன்முறைகள் குறித்து முகநூலில் கருத்துகளைப் பதிவிட்டதாக அசாம் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதில் டெல்லி கலவரத்துக்கும் இந்துத்துவா சக்திகளுக்கும் தொடர்பிருப்பதகா பதிவிட்டிருந்ததாக புகார் எழுந்தது. ஆனாலும் இந்த விரிவுரையாளர் தன் பதிவுகளை நீக்கியதோடு அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிசார் குருசரண் கல்லூரியில் ‘கெஸ்ட்’ விரிவுரையாளரான சுரதீப் சென்குப்தா என்ற இந்த விரிவுரையாளரைப் புகாரின் அடிப்படையில் கைது செய்ததாக சிசார் போலீஸ் உயரதிகாரி மனவேந்திர தேப்ராய் தெரிவித்தார்.
மத உணர்வுகளைப் புண்படுத்துவதற்கு எதிரான சட்டப்பிரிவு உட்பட 3 பிரிவுகளின் கீழ் விரிவுரையாளர் சென் குப்தா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ் துறை.
இவரின் பதிவுகளை குணால்ஜித் தேவ் என்பவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சென்குப்தா சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்களை புண்படுத்தியதாக புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சென்குப்தா பதிவுகளை நீக்கிய பிறகு அங்கே விஷயம் முடிந்திருக்கும் என்று கூறிய போலீஸ், அதன் பிறகு ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 50 பேர் கல்லூரிக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினார்கள் என்றார். அதன் பிறகு இவர்கள் புகார் பதிவு செய்தனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் விரிவுரையாளரை நீக்குமாறு ஏபிவிபி அமைப்பு தனக்கு நெருக்கடி அளிப்பதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார், இதனையடுத்து சென்குப்தா ராஜினாமா செய்ய முன்வந்திருப்பதாக சென்குப்தாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.