

சமூக சேவகர் அண்ணா ஹசாரே வுக்கு (78) கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், ராலேகான்சித்தியில் உள்ள ஹசாரேவின் வீட்டுக்கு அண்மையில் ஒரு கடிதம் வந்தது. ஹிந்தி, ஆங்கிலம் கலந்து எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
உங்களால்தான் (ஹசாரே) அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி அரசியலில் வளர்ந்து முதல்வராகி உள்ளார். இனிமேலும் அவரோடு எவ்வித தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. ராலேகான் சித்தி கிராமத்தைவிட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது.
இதை மீறினால் கடந்த 2013-ம் ஆண்டில் புணேவில் சுட்டுக் கொல்லப்பட்ட தேசியவாதி நரேந்திர தபோல்கருக்கு ஏற்பட்ட நிலைமைதான் உங்களுக்கும் ஏற்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இறுதியில் என்.ஜி.வி.எம். என்று கையெழுத்திடப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் அகமத் நகர் மாவட்டம், நிம்கான்வாகா பகுதியில் இருந்து கடிதம் அனுப்பப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது.