

இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளால் இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் பயன் அடைகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய விஞ்ஞானி சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28-ம் தேதியாகும். அன்றைய தினம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
தேசிய அறிவியல் தினத்தில் இந்திய விஞ்ஞானிகளின் திறமை, அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டுகிறேன். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய விஞ்ஞானிகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் இந்தியாவுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்துக்கும் பயன் அளிக்கிறது. அவர்களின் சேவை தொடர வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளைய தலைமுறையினர் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.