Last Updated : 28 Feb, 2020 07:35 PM

 

Published : 28 Feb 2020 07:35 PM
Last Updated : 28 Feb 2020 07:35 PM

எந்த இந்திய முஸ்லிமும் குடியுரிமை இழக்கமாட்டார்கள்; எதிர்க்கட்சியினர் கலவரத்தைத் தூண்டுகிறார்கள்: அமித் ஷா குற்றச்சாட்டு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் எந்த இந்திய முஸ்லிமும் தங்கள் குடியுரிமையை இழக்கமாட்டார்கள். ஆனால், சிஏஏவைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி கலவரத்தைத் தூண்டுகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணி இன்று நடந்தது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். எந்த இந்திய முஸ்லிமும் சிஏஏ சட்டத்தால் குடியுரிமையை இழக்கமாட்டார்கள். ஆனால், எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி, கலவரத்தைத் தூண்டிவிடுகிறார்கள்.

நான் முன்பு சொன்னதை மீண்டும் சொல்கிறேன். சிஏஏ சட்டத்தால், எந்த இந்திய முஸ்லிமும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள். ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிய சிறுபான்மை மக்களுக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்கும். அந்த நாட்டிலிருந்து வருவோருக்குக் குடியுரிமை வழங்கக்கூடாதா, அவர்களின் உரிமையைப் பாதுகாக்கக் கூடாதா. இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தியது என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கை. ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மகாத்மா காந்தி, சர்தார் படேல், மவுலானா ஆசாத் ஆகியோரின் கனவுகளை நனவாக்கவே மோடி அரசு இருக்கிறது.

தேசத்திலிருந்து ஜம்மு காஷ்மீர் தனித்துச் செயல்பட்ட நிலையில், 370-வது சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபின் பாரதமாதாவின் மணிமகுடமாக காஷ்மீர் விளங்குகிறது.

2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்த பின், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடைமுறைகளை முன்னெடுத்தோம். விரைவில் ராமர் கோயில் விண்ணை முட்டும் அளவுக்குக் கட்டப்படும்.

இந்த மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை நீக்கிவிட்டு பாஜகவுக்கு வாக்களித்த ஒடிசா மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x