இமாம்கள் மற்றும் மௌலவிகளுடன் டெல்லி உயர் காவல் அதிகாரிகள் சந்திப்பு: பாதுகாப்பு அளிப்பதாக உறுதி

வடகிழக்கு டெல்லியில் பாதிப்புக்குள்ளான ஒரு மசூதி.
வடகிழக்கு டெல்லியில் பாதிப்புக்குள்ளான ஒரு மசூதி.
Updated on
2 min read

கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இமாம்கள் மற்றும் மௌலவிகளை டெல்லி காவல்துறை அதிகாரிகள் இன்று சந்தித்தனர். அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினர்.

வடகிழக்கு டெல்லியில் கலவரத்தினால் கடும் மனஉளைச்சலுக்கும் கவலைக்கும் ஆளான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக டெல்லி காவல்துறையினர் வெள்ளிக்கிழமை ஒரு விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அதன் அதிகாரிகள் வடகிழக்கு டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மசூதிகளின் இமாம்கள் மற்றும் மௌலவிகளைச் சந்தித்தனர்.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் விரைவாக அமைதி திரும்புவதை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கேட்டுக்கொண்டனர். அதன்படி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற அஜித் தோவல், அப்பகுதியில் உள்ள காவல்துறையினர், பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார்.

மேலும் மக்களிடம் "நான் உங்களுக்கு பாதுகாப்புக்கான உறுதியை அளிக்கிறேன்" என்று அப்பகுதியில் வாழும் மக்களிடம் அச்சத்தைத் தீர்க்கும் வகையில் நம்பிக்கை அளித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை இரவு மூத்த அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறுபரிசீலனை செய்தார். அப்போது டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் எந்தவொரு பாதிக்கப்பட்ட காவல் நிலையத்திலும் புதன்கிழமை பெரிய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனினும் சந்தேகத்தின் பேரில் 514 நபர்கள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.

மசூதிகளுக்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள்

சமீபத்திய டெல்லி கலவரத்தில் கர்தாம்புரி மற்றும் கபீர் நகர் ஆகியவை சிஏஏ எதிர்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகள். இப்பகுதியில் உள்ள மசூதிகளுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று வந்தனர். பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

அப்பகுதியைச் சேர்ந்த பலரையும் சந்தித்தபோது, ​​மூத்த காவல் அதிகாரிகளுக்கு அப்பகுதியில் பணியில் இருந்த காவல் பணியாளர்கள் அண்மையில் நடந்த கலவரம் குறித்து விளக்கமளித்தனர்.

செவ்வாய்க்கிழமை முதல் பெரிய அளவிலான வன்முறைகளைக் கண்ட இந்த இரண்டு பகுதிகளிலும் உள்ள மக்கள் பொதுவாக அமைதியானவர்கள் என்றும், அருகிலுள்ள பகுதிகளான சீலம்பூர் மற்றும் ஜாஃப்ராபாத் போன்ற பகுதிகளைச் சேர்ந்த வெளியாட்கள் தான் இங்கே வந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் போலீஸார் மூத்த அதிகாரிகளுக்கு விளக்கமளித்தனர்.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்படி மூத்த காவல் அதிகாரிகள், காவலர்களைக் கேட்டுக்கொண்டனர்.

அப்போது, ''இது ஒரு வெள்ளிக்கிழமை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் சில குற்றவாளிகள் மீண்டும் ஒரு அமைதியின்மையை உருவாக்க பெரிய கூட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கவனமாகச் செயல்படுங்கள்'' என்று மூத்த காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதி மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூத்த காவல் அதிகாரிகள், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மசூதிகளின் இமாம்கள் மற்றும் மௌலவிகளையும் சந்தித்தனர்.

இமாம்கள் மற்றும் மௌலவிகளிடம், ''உங்கள் அனைவருக்கும் நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம். அச்சம் வேண்டாம். குற்றவாளிகள் ஒவ்வொருவர் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் அனைவருக்குமான பாதுகாப்பை நாங்கள் அளிப்போம்'' என்று மூத்த காவல் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in