

டெல்லியில் மக்களிடம் வெறுப்புணர்வைப் பரப்பும் வகையில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி, அவரின் சகோதரர் அக்பரூதீன் ஒவைசி, வாரிஸ் பதான் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி வடகிழக்குப் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 38 பேர் பலியாகியுள்ளார்கள். இந்தக் கலவரம் தூண்டுப்படுவதற்கு முக்கியக் காரணாமாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மக்களிடம் வெறுப்புணர்வைப் பரப்பும் வகையில் பேசியது காரணமாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்து சேனா அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், ''ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாசுதீன் ஓவைசி, அக்பரூதின் ஒவைசி ஆகியோர் வெறுப்புணர்வை மக்களிடம் விதைக்கும் வகையில் பேசுகின்றனர்.
அதேபோல மும்பையைச் சேர்ந்தவரும் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்தவருமான வாரிஸ் பதானும் இதே போன்றுதான் வெறுப்புணர்வைத் தூண்டும்வகையில் பேசுகிறார். இவர்களின் பேச்சால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டு பல்வேறு உயிர்கள் பலியாகின்றன. இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்" எனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல, சமூக ஆர்வலர் ஹர்ஸ் மந்தர் சார்பில் வழக்கறிஞர் சஞ்சீவ் கே. குமார் தாக்கல் செய்த மனுவில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமானத்துல்லா கான், நடிகர் ஸ்வாரா பாஸ்கர், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சயிமா ஆகியோரும் சமூக நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார்கள். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். டெல்லி கலவரம் தொடர்பாக தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் அனைத்தும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஎன் பாட்டீல், நீதிபதி சி ஹரிசங்கர் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரிணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாட்டீல், ஒவைசி சகோதரர்களுக்கும், அவரின் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான், மற்றும் புகார்தாரர்கள் அனைவருக்கும், டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கை ஏப்ரல் 13-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.