

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வன்முறைக்கு இடையே இந்து பெண்ணான சாவித்ரி பிரசாத்தின் திருமணத்தை அவருடைய அக்கம் பக்கத்தினரான இஸ்லாமியர்கள் முன்னின்று நடத்தியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 35க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்து - முஸ்லிம் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் சம்பவம் ஒன்று சந்த் பாஹ் மாவட்டத்தில் நடைபெற்றது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி சந்த் பாஹ் மாவட்டம். இங்குள்ள குறுக்குச் சாலையில் அமைந்துள்ள வீட்டின் வெளிப்புறத்தில் இரு தரப்புக்கு இடையே வன்முறை நடந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சார்ந்த 23 வயதான சாவித்ரி, தனது திருமணத்தை முன்னிட்டு (செவ்வாய்க்கிழமை) வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
சாவித்ரியின் தந்தை தனது அண்டை வீட்டாரான இஸ்லாமியர்களுடன் இணைந்து திருமணத்தை அடுத்த நாள் (புதன்கிழமை) நடத்தி வைத்தார்.
சாவித்ரியின் அண்டை வீட்டாரான இஸ்லாமிய மக்கள், அவரைத் தங்களது சொந்த மகளாக நினைத்து அவரது இல்லத்திலேயே
திருமணத்தை ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தினர்.
இந்த நிலையில் கலவரம் குறித்து சாவித்ரி பிரசாத்தின் தந்தை கூறும்போது, ''நாங்கள் திருமணத்திற்கு முந்தைய நாள் வீட்டின் மாடியில் ஏறிப் பார்த்தபோது ஊரே புகைமயமாய் இருந்தது. அது மிகவும் அச்சத்தை அளித்தது. எங்களுக்கு அமைதி தேவை. இந்தக் கலவரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்னுடைய அண்டை வீட்டார் இல்லை.
என்னுடைய அண்டைவீட்டாரான இஸ்லாமியர்களுடன் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். திருமணத்திற்காக மாப்பிள்ளையை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்ததே பெரும் ஆபத்தாக இருந்தது. இன்று எனது மகளின் திருமணம் உறவினர்கள் துணையில்லாமல் நடந்தது. ஆனால் எனது அண்டைவீட்டாரான இஸ்லாமியர்கள் எங்களுடன் இருந்தனர். அவர்கள் எங்கள் குடும்பம்” என்றார்.
மணப்பெண் சாவித்ரி கூறும்போது, ”என்னுடைய இஸ்லாம் சகோதர சகோதரிகள்தான் என்னைப் பாதுகாத்தனர்” என்றார்.