Published : 28 Feb 2020 08:35 AM
Last Updated : 28 Feb 2020 08:35 AM

அதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தகவல்

மற்றக் கட்சிகளை விட பாஜகவுக்கு 3 மடங்கு அதிக நன்கொடைகள் வருகின்றன என்று ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) தகவல் வெளியிட்டுள்ளது.

ரூ.20000 தொகைக்கு மேலான நன்கொடைகள் மற்ற கட்சிகளை விட பாஜகவுக்கு 3 மடங்கு அதிகம் வருகிறது. அதாவது 2018-19-ல் கட்சிகளுக்கான மொத்த நன்கொடை ரூ.951 கோடியில் ரூ.742 கோடி பாஜகவுக்கு மட்டுமே வரப்பெற்றுள்ளது என்கிறது ஏடிஆர் தகவல்.

அங்கீகரிக்கப்பட்ட தேசியக் அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், திரிணமூல், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிபிஎம், சிபிஐ, செப்.30, 2019-ல் தங்களுக்கு ரூ.20000த்திற்கும் மேல் வந்த டொனேஷன் தொகை குறித்த கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.

ஆனால் பாஜக தன் கணக்குகளை 31 நாட்கள் தாமதமாகத் தாக்கல் செய்ததாக ஏடிஆர் தெரிவிக்கிறது. சிபிஎம் 21 நாட்கள் தாமதமாகவும் சிபிஐ 3 நாட்கள் தாமதமாகவும் நன்கொடைக் கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளன என்று ஏடிஆர் தகவல் தெரிவிக்கிறது.

“ரூ. 951 கோடி மொத்த நன்கொடைகளில் பாஜக மட்டுமே ரூ.742 கோடியை ரூ.20,000த்திற்கும் மேலான நன்கொடை தொகையாகப் பெற்றுள்ளது. இது மற்ற கட்சிகளைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும், பகுஜன் சமாஜ் கட்சி தனக்கு ரூ.20,000 தாண்டி எந்த நன்கொடையும் வரவில்லை என்று 13 ஆண்டுகளாகக் கூறிவருகிறது” என்று ஏடிஆர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது”

2017-18-ஐ ஒப்பிடும் போது தேசியக் கட்சிகள் அறிவிக்கும் நன்கொடைகளின் விகிதம் 103% அதிகரித்துள்ளது. 2018-19 தேர்தல் ஆண்டு என்பதால் நன்கொடை அதிகரித்திருக்கிறது. 2017-18-ல் பாஜகவுக்கு வந்த நன்கொடை ரூ.437.04 கோடி, இது 2018-19-ல் ரூ.742.15 கோடியாக அதிகரித்துள்ளது.

பெரும்பாலான நன்கொடைகள் மகாராஷ்ட்ராவிலிருந்து அதிகம் வந்துள்ளன, எங்கிருந்து வந்தது என்றால் கார்ப்பரேட் அல்லது வர்த்தகத் துறையிடமிருந்து அதிக நன்கொடைகள் வந்துள்ளன. மகாராஷ்ட்ராவிலிருந்து மட்டும் ரூ.542 கோடி நன்கொடைத் தொகை கட்சிகளுக்கு வந்துள்ளன. டெல்லியிலிருந்து ரூ.141 கோடி, ரூ.55.31 கோடி குஜராத்திலிருந்து வந்துள்ளது.

மொத்த நன்கொடை தொகையில் சுமார் 92% கார்ப்பரேட், வர்த்தக, தொழில் துறையிலிருந்து கட்சிகளுக்கு வந்துள்ளது. அதாவது 876.11 கோடி ரூபாய்கள். கார்ப்பரேட் வர்த்தகத் துறை மேற்கொண்ட 1775 நன்கொடைகளில் 1575 நன்கொடைகள் பாஜகவுக்குச் சென்றன. அதாவது 692.08 கோடி ரூபாய் பாஜகவுக்கு தொழிற்துறையினரிடமிருந்து மட்டும் கிடைத்துள்ளன. இதே துறையினரிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த நன்கொடை ரூ.122.5 கோடியாகும்.

இதில் டாடா குழுமம் கட்டுப்பாட்டில் உள்ள புராக்ரஸிவ் எலெக்ட்ரல் ட்ரஸ்ட் என்ற அமைப்பிலிருந்து மட்டும் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.455.15 கோடி நன்கொடை வந்துள்ளது.

-சிறப்புச் செய்தியாளர், தி இந்து, ஆங்கிலம் நாளிதழ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x