

கர்நாடக மாநிலம் துமக்கூருவை சேர்ந்தவர் சுதாகர் கிருஷ்ண ராவ். கடந்த 1897-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி இவர் பிறந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் இந்தியாவில் மிகவும் வயதானவராக இவர் கருதப்பட்டார். இவர் ஹரித்துவாரில் உள்ள குருகுலத்தில் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்து, ‘சதுர்வேதி' என பட்டம் பெற்றார்.
தொடக்கத்தில் ஆரிய சமாஜத்தில் இணைந்த சுதாகர் சதுர்வேதி பின்னர் காந்தியுடன் இணைந்தார். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவரது சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை உட்பட பல்வேறு சுதந்திர கால சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியாக விளங்கினார்.
முதுமை காலத்தில் பெங்களூருவில் உள்ள ஜெயநகரில் தனது உறவினர்களுடன் வசித்த சுதாகர் சதுர்வேதி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.