

பிஹார் மாநிலத்தில் 'பாத் பிஹார் கி' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த 18-ம் தேதி பிஹார் மாநிலத்தில், 'பாத் பிஹார் கி' என்ற பெயரில் அதாவது, பேச்சு பிஹாரைப் பற்றியது என்ற கோஷத்தோடு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் பிஹார் மாநிலத்தை நாட்டில் முதல் 10 வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில் கொண்டுவருவதன் நோக்கம்தான் அந்தப் பிரச்சாரத்தின் கருப்பொருளாகும் .பிஹாரின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அனைத்து இளைஞர்களும் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை அளிக்கலாம் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.
நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அடுத்த வாரத்திலேயே இந்தப் பிரச்சாரத்தை பிரசாந்த் கிஷோர் முன்னெடுத்ததால், நிதிஷ் குமாருக்குப் போட்டியாக வருகிறாரா என்ற பேச்சு எழுந்தது.
இந்த சூழலில், பாடலிபுத்ரா காவல் நிலையத்தில் பிரசாந்த் கிஷோர் மீது ஷாஸ்வந்த் கவுதம் என்பவர் நேற்று இரவு புகார் அளித்தார்.
ஷாஸ்வந்த் கவுதம் என்பவர், கிழக்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் தற்போது புள்ளிவிவர ஆய்வாளராக கவுதம் இருந்து வருகிறார்.
இதில் பிரசாந்த் கிஷோர் தனது எழுத்துகளை, தனக்குத் தெரியாமல் எடுத்து மாற்றங்களுடன் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். தன்னுடைய கருத்துகளைத் திருடி 'பாத் பிஹார் கி' என்ற பெயரில் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகிறார் என்று புகார் அளித்தார்.
கவுதம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் அதிகாரி கமலேஷ்வர் பிரசாந்த் சிங், பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்தார். பிரசாந்த் கிஷோர் மீது ஐபிசி 420 (மோசடி வழக்கு), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.