டெல்லியில் 'குஜராத் மாடல்' கலவரம்; முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: அமித் ஷா மீது என்சிபி கடும் தாக்கு

நவாப் மாலிக், அமித் ஷா : கோப்புப்படம்
நவாப் மாலிக், அமித் ஷா : கோப்புப்படம்
Updated on
2 min read

டெல்லியில் நடந்த கலவரம் குஜராத்தில் நடந்த கலவரத்தைப் போன்ற பிரதிபலிப்பாக இருக்கிறது. இந்த கலவரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என என்சிபி கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சிஏஏ சட்டத்துக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தில் 34 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய, காவல்துறையைக் கைவசம் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து அமித் ஷா ராஜினாமா செய்வது குறித்து மனு அளித்து வலியுறுத்தினர்.

என்சிபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் : படம் | ஏஎன்ஐ
என்சிபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் : படம் | ஏஎன்ஐ

இந்நிலையில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் மும்பையில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "கடந்த 2002-ம் ஆண்டு பாஜக ஆண்ட குஜராத்தில் நடந்த கலவரத்தைப் போன்று அந்த மாடலில் டெல்லியில் கலவரம் நடந்திருக்கிறது. அங்கு அரங்கேற்றியதைப் போல் டெல்லியிலும் அரங்கேற்றியுள்ளார்கள்.

டெல்லி கலவரத்தை உள்துறை அமைச்சரால் கட்டுப்படுத்த முடியவில்லையா அல்லது அவர் கலவரத்தை அடக்க போலீஸாருக்கு எந்தவிதமான கட்டளையும் விரைவாகப் பிறப்பிக்கவில்லையா என்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. டெல்லியில் நடந்த கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று முன்கூட்டியே உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய அமித் ஷா ராஜினாமா செய்யவேண்டும். அவர் உள்துறை அமைச்சர் பதவியில் இருக்க தார்மீக உரிமை இல்லை.

இந்தக் கலவரத்தில் போலீஸார் மவுனமான பார்வையாளர்கள் போல் செயல்பட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்தக் கலவரத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசியல் அழுத்தம், நெருக்கடி காரணமாக போலீஸார் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன். கலவரத்தைத் தூண்டிவிடும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்" என நவாப் மாலிக் வலியுறுத்தினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in