

டெல்லியில் நடந்த கலவரத்தில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அரசியல் செய்கிறது. கடந்த 2 மாதங்களாக இறுதிவரை போராடுவோம் கோஷத்தின் மூலம் கலவரத்தைத் தூண்ட சோனியா முயன்றார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லி வடகிழக்கில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறவிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மனு அளித்தார்கள்.
இந்தச் சூழலில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''டெல்லி கலவரத்தில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும், உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்டபோதும் மற்ற கட்சிகள் ஏதும் பேசாமல் இருக்கிறார்கள். இதுபோன்ற சூழலில் அனைத்துக் கட்சிகளும் அமைதியைக் கொண்டு வருவதற்கு சமமான அளவுக்குப் பொறுப்பு இருக்கிறது.
எம்எல்ஏ அமைதிக்காக உழைக்க வேண்டும். ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மதத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்துகிறார்.
டெல்லியில் வன்முறையைத் தூண்டுவதற்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே முயற்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இறுதிவரை போராடுவோம் என்ற கோஷத்தை முன்னெடுத்து கலவரத்தைத் தூண்ட முயன்றார்.
டெல்லியில் அமைதியை நிலைநாட்ட பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் இந்த 34 உயிர்கள் பலியும், 200 பேர் காயமடைந்த இந்தக் கலவரத்தில் அரசியல் செய்யும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது.
இந்தக் கலவரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டவுடன் 2 நாட்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோருவது மலிவான அரசியல்''.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.