

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ராஜினாமா செய்யக் கோரும் காங்கிரஸ் கட்சியின் அறம் என்பது கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரம், அவசர நிலை ஆகியவற்றில் தெரிந்தது என்று பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் வடகிழக்கில் நடந்த 3 நாட்களாக நடந்த கலவரத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்தாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதுகுறித்து இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர்
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்தவரும், போபால் எம்.பி.யுமான பிரக்யா தாக்கூர் இன்று மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டெல்லி கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாததற்குப் பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்துள்ள கோரிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பிரக்யா தாக்கூர பதில் அளிக்கையில், "எந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சி அமித் ஷா ராஜினாமாவைக் கோருகிறது. கடந்த 1975-77 இல் அவசர நிலை, சீக்கியர்களைக் கொன்று குவித்தது போன்ற செயல்களில் காங்கிரஸின் அறம் என்ன என்பது தெரிந்தது. டெல்லியில் தொடர்ச்சியாக வன்முறைகளை நிகழ்த்தியது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், அவர்கள் அமித் ஷா ராஜினாமா குறித்துக் கேள்வி எழுப்புகிறார்கள். எந்த அடிப்படையில் இதையெல்லாம் அவர்கள் கேட்கிறார்கள்.
நாட்டுக்கு எதிராக பாஜக எந்தச் செயலையும் செய்யாது. நாட்டு நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த விஷயத்தையும் பாஜக ஒருபோதும் செய்யாது. அவ்வாறு பாஜக நினைக்காது. நாட்டை வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தேச நலனுக்காகவே நாடாளுமன்றத்தில் சிஏஏ திருத்தச் சட்டத்தை பாஜக அரசு இயற்றியது என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்" என்றார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதி எம்.பி.யான பிரக்யா தாக்கூர், 2008-ம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தற்போது என்ஐஏ விசாரணையின் கீழ் பிரக்யா உள்ளார்.