

கர்நாடகத்தில் ஊழல் புகாரில் சிக்கும் லோக் ஆயுக்தா நீதிபதியை பதவியில் இருந்து நீக்க மாநில சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் வழங்கி, சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் லோக் ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ், அரசு அதிகாரிகளிடம் ரூ. 100 கோடி வரை லஞ்சம் கேட்டு மிரட்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிபதி பாஸ்கர் ராவ் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. ஆனால் இதனை பாஸ்கர் ராவ் ஏற்க மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா கூறும்போது, “உச்சநீதிமன்றத்தில் நேர்மையாக பணியாற்றி, ஓய்வு பெற்ற நீதிபதி தான் லோக் ஆயுக்தாவுக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பிறகு, அவரை பதவிக் காலம் (5 ஆண்டுகள்) முடியும் வரை பதவி நீக்க முடியாது. 1984 லோக் ஆயுக்தா சட்டப்படி, தன்னாட்சி அமைப்பான லோக் ஆயுக்தா நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கர்நாடக சட்டப் பேரவைக்கு கிடையாது. தேவைப்பட்டால் நீதிபதி மீதான புகாரை விசாரித்து, அறிக்கை அளிக்க மட்டுமே புலனாய்வு பிரிவுக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே அனைத்து கட்சியினரின் பங்களிப்புடன் லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருக்கிறோம்” என்றார்.
மசோதா தாக்கல்
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை லோக் ஆயுக்தா சட்டத் திருத்த மசோதா கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் லோக் ஆயுக்தா நீதிபதியின் நியமனம், அதிகாரம், விசாரணை வரம்பு ஆகியவை சட்டப்பேரவையின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழல் உள்ளிட்ட புகாரில் சிக்கும் நீதிபதியின் மீது விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதா (2015) கர்நாடக சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.