

சிஏஏவை எதிர்த்துக் கிளம்பியுள்ள போராட்ட வன்முறைகளில் இன்று மூன்று மருத்துவமனைகளில் மேலும் ஏழு உயிரிழப்புகள் பதிவானநிலையில் பலி எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதுகுறித்து டெல்லி சுகாதார துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் கூறியதாவது:
வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வன்முறை வெடித்ததில் இருந்து 50 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை இரவு வரை, தில்ஷாத் கார்டனில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. தற்போது ஜிடிபி மருத்துவமனையில் மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன, இதில் புதன்கிழமை எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை மேலும் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது, மொத்த இறப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு டெல்லி சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.