ஊழல் புகார்களை விசாரிப்பதில் தாமதம்: துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ‘சிவிசி’ கடிதம்

ஊழல் புகார்களை விசாரிப்பதில் தாமதம்: துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ‘சிவிசி’ கடிதம்
Updated on
1 min read

ஊழல், முறைகேடு தொடர்பாக விசாரித்து தீர்வு காண்பதில் ஏற்படும் அதிகபட்ச தாமதம் குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து துறைகளிலுள்ள தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அமைச்சகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் உள்ள அனைத்து தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஆறுமாதங்களாக நிலுவையில் இருக்கும் புகார்களை விசாரித்து முடித்து வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், நவம்பர் முதல் வாரத்தில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

விசாரணை அறிக்கைகள், முறைகேடுகளுக்கு எதிராகப் போராடுபவர்களின் புகார்கள், துறைசார்ந்த விசாரணை அதிகாரி கையாளும் வழக்குகள், குறைந்த அல்லது அதிக அபராதம் விதிக்கும்படி தான் அளித்த அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவற்றின் நிலுவை குறித்து ஆய்வு செய்த சிவிசி, மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆறுமாத நிலுவை வழக்குகள் குறைவாக இருக்கும் துறைகளில், எஞ்சிய நிலுவை வழக்குகளில் கவனம் செலுத்தும்படி சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ‘தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரியின் வசமுள்ள நிலுவை வழக்குகள் குறித்த விவரங்கள் ஆணையத்தின் இணையதளம் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றாலும், சில அதிகாரிகள் இவற்றின் விவரங்களில் கவனம் செலுத்துவதில்லை. புகார்களை முடித்து வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. எனவே, அனைத்து அதிகாரிகளும் இணையதள பகுதிக்குள் தினமும் நுழைந்து பார்க்க வேண்டும்’ எனவும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் (சிவிஓ) கடந்த ஆண்டு 45,713 புகார்களை பெற்றுள்ளனர். இவற்றில், 32,054 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 13,659 புகார்கள் நிலுவையில் உள்ளன. 6,499 புகார்கள் ஆறு மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ளன.

2,831 புகார்களில் துறைரீதியான விசாரணை 6 மாதங்களாக நிலுவையில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in