Published : 27 Feb 2020 07:52 AM
Last Updated : 27 Feb 2020 07:52 AM

இடதுசாரி செயற்பாட்டாளர் எழுத்தாளர் பிரபா வர்மாவுக்கு குருவாயூர் தேவஸ்தானம் விருது: விஷ்வ இந்து பரிஷத் எதிர்ப்பு

பிரபா வர்மா

திருவனந்தபுரம்

பிரசித்திபெற்ற மலையாளக் கவிஞரும், கிருஷ்ண பக்தருமான பூந்தானத்தின் பெயரில் குருவாயூர் தேவஸ்தானம் ஆண்டுதோறும் பக்திப் படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான பூந்தானம் விருது, தீவிர இடதுசாரி செயற்பாட்டாளர் பிரபா வர்மாவுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு விஷ்வ இந்து பரிஷித் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபா வர்மாவுக்கு அவர் எழுதிய ‘ஷியாமா மாதவம்’ என்னும் கவிதைத் தொகுப்புக்காக பூந்தானம் விருதை அறிவித்திருக்கிறது குருவாயூர் தேவசம் போர்டு.

இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் கேரள மாநில இணைச் செயலாளர் வி.ஆர்.ராஜசேகரன் கூறியதாவது:

மகாபாரதம், பகவத் கீதை உள்ளிட்ட கிருஷ்ணனரின் பெருமையை சொல்லும் படைப்புகளை பிரபலமாக்கும் நோக்கத்திலேயே கோயில் காணிக்கை பணத்தில் இருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.

ஆனால், இந்துத்துவ சிந்தனைக்கு அப்பால் இருக்கும் ஒருவருக்கு, தேவசம் போர்டு விருது கொடுப்பதை எப்படி ஏற்க முடியும்? அவரது கவிதைத் தொகுப்பை ஆராயாமலேயே விருது அறிவித்து இருக்கிறார்கள். அதில் அவர் கிருஷ்ணரை கொச்சைப்படுத்தியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

விருது அறிவிக்கப்பட்டிருக்கும் பிரபா வர்மா, கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஊடகச் செயலாளராக இருக்கிறார். இதற்கு முன்பு கேரளத்தில் இடதுசாரிகளின் அதிகாரப்பூர்வ ஏடான தேசாபிமானியில் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். ஈ.கே.நாயனார் கேரள முதல்வராக இருந்தபோது, அவரது பத்திரிகை செயலாளராகவும் இருந்த பிரபா வர்மா, ஊடக விவாதங்களிலும் இடதுசாரி தளத்தில் இருந்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைப்பவர்.

பிரபா வர்மா இடதுசாரி என்பதாலேயே இந்த விருது அறிவிப்புக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இடதுசாரி தரப்பில் கூறப்படுகிறது.

பூந்தானம் விருது , ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவ்விருது வழங்கும் நிகழ்வு குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த சர்ச்சை கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x