Last Updated : 26 Feb, 2020 06:44 PM

 

Published : 26 Feb 2020 06:44 PM
Last Updated : 26 Feb 2020 06:44 PM

அமைதியைக் கொண்டுவரத் தவறிய அரசு; அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லியில் அமைதியைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது. இதற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே கடந்த 3 நாட்களாக மோதல் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்ட போலீஸார், மக்கள் காயமடைந்துள்ளனர்.

டெல்லியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக மூத்த தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழலில் டெல்லியில் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும், வன்முறைக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்

அப்போது தொண்டர்கள் மத்தியில் பிரியங்கா காந்தி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைதியையும், சகோதரத்துவத்தையும் உணர்த்த வேண்டும்.

டெல்லியில் பல்வேறு மாநில மக்கள் வேலைக்காக வந்துள்ளார்கள். சமூக ஒற்றுமை மிக்க நகரை மத்திய அரசு அழிக்க நினைக்கிறது. டெல்லி நமது நகரம். மக்கள் இங்கு வந்து பணியாற்றுகிறார்கள்.

ஆனால், இன்று இந்த நகரில் வெறுப்பும், நெருப்பும் பரப்பப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி மக்களுக்காகப் போராடி வருகிறது. சமூகத்தில் ஒற்றுமையையும், அமைதியையும் கொண்டுவருவது நமது கடமை. அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்ப வேண்டும்.

தலைநகரில் அமைதியைக் கொண்டுவர வேண்டியது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கடமை. ஆனால் அவர் தோல்வி அடைந்துவிட்டார். உள்துறை அமைச்சருடன் பேசி அவரை ராஜினாமா செய்யக் கோரிச் சென்றோம். ஆனால், போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர் " எனத் தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அந்தக் கூட்டம் முடிந்து புறப்படுகையில் நிருபர்களுக்கும் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். வன்முறையைக் கையிலெடுக்கக் கூடாது. பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பேசிய பேச்சு வெட்கப்பட வேண்டியது. மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யாமல் இருப்பது அதைக் காட்டிலும் வெட்கக்கேடு. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x