Last Updated : 26 Feb, 2020 03:54 PM

 

Published : 26 Feb 2020 03:54 PM
Last Updated : 26 Feb 2020 03:54 PM

டெல்லி கலவரம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்; சோனியா காந்தி வலியுறுத்தல்

டெல்லியில் நடந்த வகுப்புவாதக் கலவரத்தில் 21 பேர் பலியானதற்கு மத்திய அரசும், டெல்லி அரசும் பொறுப்பேற்க வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள், போலீஸார் காயமடைந்துள்ளனர்.

டெல்லியில் இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்த காட்சி.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. ராகுல் காந்தி வெளிநாடு சென்றுவிட்டதால், அவர் இதில் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் டெல்லி வன்முறை குறித்தும், டெல்லியில் அமைதி கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காரியக் கமிட்டிக் கூட்டத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''டெல்லியில் நடந்த வகுப்புவாத மோதலில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளார்கள். இந்தக் கலவரத்துக்குப் பின்னணியிலும், உயிர்ப்பலிக்குப் பின்னணியிலும் ஏதோ சதி இருக்கிறது என்று கருதுகிறோம்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது சதி இருப்பதைக் கண்டுபிடித்தோம். மக்கள் மத்தியில் பாஜக தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் விதமாகப் பேசி சதி செய்தார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

இந்தக் கலவரத்துக்கு மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். கலவரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினா செய்யவேண்டும்.

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைதியை நிலைநாட்டத் தவறிவிட்டார். பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, வன்முறையைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரியவாறு பேசியுள்ளார். டெல்லியில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசித்தது. டெல்லியில் சூழல் மிகவும் மோசமாக இருப்பதால், அவசரமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

ஒவ்வொரு வார்டிலும் அமைதிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மக்களிடம் பேச வேண்டும். தேவையான அளவுக்கு போலீஸார் களத்தில் இறக்கப்பட்டு அமைதியை நிலைநாட்டி இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டெல்லி முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாற்றி, அவர்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும் எனக் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது''.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x