

டெல்லியில் நடந்த கலவரத்தில் 21 பேர் பலியான நிலையில், அதுகுறித்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அமைதியையும் சகோதுரத்துவத்தையும் பராமரிக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள், போலீஸார் காயமடைந்துள்ளனர்.
கடந்த இரு நாட்களாக அதிபர் ட்ரம்ப் இந்திய வருகையில் அவருடன் இருந்த பிரதமர் மோடி, கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் டெல்லி கலவரம் தொடர்பாக இன்று ட்விட்டரில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், "டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரம் தொடர்பாகவும், அங்கு நிலவும் சூழல் குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப போலீஸார் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அமைதியும், ஒருமைப்பாடும் நமது பண்பாட்டின் மையக் கருத்துகள். டெல்லியில் உள்ள அனைத்து சகோதர, சகோதரர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில், அமைதியையும் சகோதரத்துவத்தையும் அனைத்து நேரமும் பராமரிக்க வேண்டும்" என்று மோடி தெரிவித்துள்ளார்.