

ராஜஸ்தானில் திருமணத்திற்காகச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஆற்றில் விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
பூண்டி மாவட்டத்தில் கோட்டா - தவுசா நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்தக் கோர விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த மெஜ் நதி ராஜஸ்தானில் சம்பல் ஆற்றின் கிளை நதியாகும்.
இதுகுறித்து லகேரி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் ராஜேந்திர குமார் தொலைபேசியில் கூறியதாவது:
''கோட்டா - தவுசா நெடுஞ்சாலையில் கோட்டாவிலிருந்து சவாய் மாதோபூரை நோக்கி 28 பேரை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
லேகாரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாப்டி கிராமத்திற்கு அருகே ஒரு பாலத்தில் பயணித்தபோது ஓட்டுநர் பேருந்தின் சமநிலையை இழந்துவிட்டார்.
பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால், பாதை தவறிய பேருந்து மேஜ் ஆற்றில் விழுந்து மூழ்கியது. 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 11 பேர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பலியானார்கள்.
இதனை அடுத்து தகவல் அறிந்த பிறகு மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கிராமத்தில் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
இந்தக் கோர விபத்தில் 11 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் லேகாரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்''.
இவ்வாறு துணை ஆய்வாளர் ராஜேந்திர குமார் தெரிவித்தார்.