Published : 26 Feb 2020 10:43 AM
Last Updated : 26 Feb 2020 10:43 AM

கர்நாடகாவில் பேருந்துக் கட்டணங்களை 12% உயர்த்திய எடியூரப்பா அரசு

கர்நாடகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே நடைமுறைக்கு வந்தது.

ஆனால் பெங்களூருவில் கட்டணம் உயர்த்தப்படவில்லை, காரணம் ஏற்கெனவே நெரிசலாகக் காணப்படும் பெங்களூரு போக்குவரத்தில் கட்டண உயர்வினால் மேலும் தனியார் வாகனங்கள் அதிகம் சாலைகளுக்குள் வர வாய்ப்பிருப்பதாகக் கருதி நகரப் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை.

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம்.

உப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம், கலபுரகியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 25 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து கழகங்கள், பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில் அரசு பஸ் கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது. பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேருந்துகளை இயக்கும் செலவுகள் அதிகரிப்பதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் எடியூரப்பா எஸ்டியு பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்படும் என்று கடந்த நவம்பரில் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இந்த வாக்குறுதியிலிருந்தும் அவர் பின் வாங்கியுள்ளார். இத்தனைக்கும் மாநில போக்குவரத்துக் கழக கட்டணங்கள் கர்நாடகாவில்தான் அதிகம். 2014 முதல் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x