

முன்பதிவு ரத்துக்கான கட்டணம் மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படாதது ஆகியவற்றின் மூலம் ரயில்வே துறை கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரை சேர்ந்த சுஜித் சுவாமி என்ற தகவல் உரிமை ஆர்வலர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே தகவல் மையம் (சிஆர்ஐஎஸ்) இந்த பதிலை அளித்துள்ளது.
இதன்படி 2017, ஜனவரி 1 முதல் 2020, டிசம்பர் 31 வரையிலான 3 ஆண்டுகளில் ஒன்பதரை கோடி வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படவில்லை. இதன் மூலம் ரயில்வே துறை ரூ.4,335 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வே துறை ரூ.4,684 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இவ்விரு வகையிலும் படுக்கை வசதி டிக்கெட்டுகள் மூலம் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. இதையடுத்து மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட்டுகள் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.
ரயில்வே பயணச் சீட்டுகளை கவுன்ட்டர்களில் வாங்குவோர் மற்றும் இணைய தளம் மூலம் வாங்குவோர் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது.
இந்த 3 ஆண்டுகளில் 74 கோடி பயணிகள் பயணச்சீட்டுகளை கவுன்ட்டர்களில் பெற்றுள்ள நிலையில் 145 கோடி பேர் இணைய தளம் மூலம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ரயில்வே துறையின் முன்பதிவு கொள்கை பாரபட்சமானது என்று கூறி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தகவல் உரிமை ஆர்வலர் சுஜித் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது மனுவில், “ஆன்லைன் முன்பதிவு மற்றும் கவுன்ட்டர் முன்பதிவுக்கு வெவ்வேறு கொள்கையை ரயில்வே பின்பற்றுகிறது. இது பயணிகளுக்கு தேவையற்ற நிதிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இக்கொள்கை கைவிடப்பட வேண்டும். ரயில்வே துறை நியாயற்ற முறையில் வருவாய் ஈட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். -பிடிஐ