Last Updated : 25 Feb, 2020 08:28 PM

 

Published : 25 Feb 2020 08:28 PM
Last Updated : 25 Feb 2020 08:28 PM

டெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்

கவுதம் கம்பீர் : கோப்புப்படம்

புதுடெல்லி

டெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட போலீஸார், மக்கள் காயமடைந்துள்ளனர்

கலவரத்தில் காயமடைந்த போலீஸார் டெல்லி பத்பார்கஞ்ச் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று நேரில் சந்தித்து பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் உடல் நலம் விசாரித்தார்.

போலீஸ் துணை ஆணையர் ஷாதரா, அமித் சர்மா, இணை ஆணையர் அனுஜ் ஜெயின், தலைமைக் காவலர் யாஷ்பால் ஆகியோரிடம் கலவரம் தொடர்பாகக் கம்பீர் கேட்டறிந்தார். இதற்கிடையே கலவரத்தில் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ரா பேசுவதாக ஆம் ஆத்மி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கவுதம் கம்பீர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

''டெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்கக்கூடாது.

பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தால்கூட தவறு செய்திருந்தால், மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியிருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீருடையில் வந்த காவலர்களை இவ்வாறு நடத்தியிருக்கிறார்கள் என்றால், சாதாரண மக்களை எவ்வாறு நடத்துவார்கள். இது என்ன மாதிரியான போராட்டம். மக்களை ஆத்திரமூட்டும் பேச்சுகள் பாஜக சார்பில் யார் பேசியிருந்தாலும் அல்லது ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி என எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லி மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என விரும்புகிறார்கள். ஆதலால், மக்களைத் தூண்டிவிடுவோர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் எனப் பார்க்கக்கூடாது. யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைக்கு நான் ஆதரவு தருகிறேன்".

இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கபில் மிஸ்ரா தேர்தல் பிரச்சாரத்தின்போது சிஏஏவுக்கு ஆதரவாகப் பேசினார். அதுமட்டுமல்லாமல், ஜாப்ராபாத் பகுதியில் உள்ள மஜ்பூர் சவுக் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களைத் திரட்டுவதற்காக வழிநடத்திச் சென்றவர் கபில் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

சிஏஏவுக்கு ஆதரவாக ஆதரவாளர்களைத் திரட்டியபின்தான் எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x