இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மக்களுக்கு வேண்டுகோள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

டெல்லியில் நடந்து வரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீஸார் தலையிட்டுத் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் நேற்றும் ஆங்காங்கே கலவரம் வெடித்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் ஒருதலைமைக் காவலர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 3-வது நாளாகவும் கலவரம் தொடர்ந்தது. போலீஸார் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடியடி நடத்திக் கட்டுப்படுத்தினாலும் ஆங்காங்கே தொடர்ந்தது. கலவரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது. 150 போலீஸாருக்கும் மேலாகக் காயமடைந்தனர்.

இதற்கிடையே டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் கலவரத்தால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மக்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் இன்று சந்தித்தனர்.

காயமடைந்தவர்களைச் சந்தித்த பின் முதல்வர் கேஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், " கலவரத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும், துப்பாக்கி குண்டால் காயமடைந்தவர்களையும் சந்தித்துப் பேசினேன். தரமான சிகிச்சைக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கலவரத்தைத் தடுத்து நிறுத்த முடியாததுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அனைவரிடம் கேட்பது என்னவென்றால், தயவு செய்து வன்முறையை நிறுத்துங்கள். இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசியுள்ளேன். போதுமான அளவு படைகளை அனுப்பக் கோரியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in