Last Updated : 25 Feb, 2020 03:51 PM

 

Published : 25 Feb 2020 03:51 PM
Last Updated : 25 Feb 2020 03:51 PM

கடற்படைக்காக அதிநவீன அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க ரூ.21,000 கோடிக்கு இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: தீவிரவாதத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற இருநாடுகளும் உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21,000 கோடிக்கு ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி, இந்திய கடற்படைக்காக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங் கப்பட உள்ளன.

அமெரிக்க அதிபராக பதவி யேற்ற பிறகு டொனால்டு ட்ரம்ப் முதல்முறையாக, 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக நேற்று முன் தினம் இந்தியா வந்தார். அகமதா பாத் விமான நிலையம் வந்திறங்கிய அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார். அங்குள்ள சபர்மதி ஆசிரமத்தை அதிபர் ட்ரம்ப் பார்வையிட்டார். பின்னர் சர்தார் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங் கிருந்து ஆக்ராவுக்கு சென்று உல கின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலின் அழகை ரசித்தார். அன்றிரவு டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

இரண்டாம் நாளான நேற்று காலை குடியரசுத் தலைவர் மாளிகை யில் அதிபர் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட் டது. ட்ரம்ப் அவரது மனைவி மெலானியா உள்ளிட்டோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றனர். அப்போது முப்படைகளின் அணிவகுப்பு மரி யாதையை ட்ரம்ப் ஏற்றுக் கொண் டார். இதைத் தொடர்ந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் ட்ரம்பும் அவரது மனைவி மெலானியாவும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அங்கு மரக்கன்றை நட்டனர்.

ஹெலிகாப்டர்கள்

இதன்பின் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடியும் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கும் இடையே ரூ.21,000 கோடிக்கு ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதன்படி, இந்திய கடற்படைக் காக அமெரிக்காவிடம் இருந்து, 24 ரோமியோ ஹெலிகாப்டர்களும் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் வாங்கப்பட உள்ளன. ரோமியோ ஹெலிகாப்டர்களின் ஏவுகணை கள் மூலம் கடலுக்கு அடியில் செல்லும் நீர் மூழ்கிகளையும் தாக்கி அழிக்க முடியும்.

மேலும் மனநலம், மருத்துவ உப கரணங்களை பாதுகாப்பாக கையா ளுவது, இந்தியன் ஆயில் - சார்ட் இன்டஸ்ட்ரீஸ் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பான 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிறகு இருதலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி கூறிய தாவது:

பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், இரு நாட்டு மக்களின் தொடர்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி னோம். இருநாடுகள் இடை யிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி மேற்கொள்ளப் பட்டது. எரிசக்தி துறையில் இருநாட்டு வர்த்தகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவுக்கு எண்ணெய், எரிவாயு விநியோகம் செய்யும் பிரதான நாடாக அமெரிக்கா விளங்குகிறது. தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். இருதரப்பு வர்த்தக அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. வர்த்தக ஒப்பந்தத்துக்கு சட்டபூர்வ வடிவம் கொடுக்க இரு நாட்டு குழுக்களும் முடிவு செய்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

தீவிரவாதத்தை ஒழிப்போம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது:

பாதுகாப்புத் துறையில் அமெரிக்கா, இந்தியா இடையே ரூ.21,000 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் படி, உலகின் மிகச் சிறந்த தயாரிப்பு களான அப்பாச்சி, ரோமியோ ஹெலி காப்டர்கள், ராணுவ தளவாடங் களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும். இரு நாடுகளும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி யில் ஈடுபடும். அடிப்படைவாத இஸ் லாமிய தீவிரவாதத்தில் இருந்து மக்களை காப்பாற்ற இரு நாடு களும் உறுதிபூண்டுள்ளன.

பாகிஸ்தான் மண்ணில் செயல் படும் தீவிரவாதிகளை அழிப்பது தொடர்பாக அந்த நாட்டுடன் அமெரிக்கா இணைந்து செயல் படுகிறது. இந்திய-பசிபிக் கடல் பகுதியில் சுதந்திரமான போக்கு வரத்தை உறுதி செய்ய அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இணைந்து செயல் படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். தீவிரவாதத்தை தடுப்பது, இணையதள குற்றங்கள், கடல்சார் பாதுகாப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

5ஜி தொலைத்தொடர்பு சேவை குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆஸ் திரேலியா, ஜப்பானுடன் இணைந்து ‘புளூ டாட்' இணைய சேவையை தொடங்குவது குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது.

வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளின் குழுக்களும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. விரை வில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத் தாகும் என்று நம்புகிறேன். நான் அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கான ஏற்றுமதி 60 சதவீதமும் இந்தியாவுக்கான எரிசக்தி ஏற்றுமதி 500 சதவீதமும் அதிகரித்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பிறகு மாலையில் டெல்லி யில் உள்ள அமெரிக்க தூதரகத் துக்கு சென்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அங்கு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். நிருபர் களுக்கு பேட்டியளித்தார். இரவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்புக்கு விருந்து அளிக்கப்பட்டது. இதில் ட்ரம்ப் அவரது மனைவி மெலானியா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பிறகு நேற்றிரவு டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு ட்ரம்ப் புறப்பட்டார்.

காங்கிரஸ் புறக்கணிப்பு

உலகத் தலைவர்கள் இந்தியா வுக்கு வரும்போது எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பது வழக்கம். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, அதிபர் ட்ரம்ப் சந்திக்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக குடியரசுத் தலை வர் மாளிகை விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் விருந்தை புறக்கணித்துவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x