Last Updated : 25 Feb, 2020 12:56 PM

 

Published : 25 Feb 2020 12:56 PM
Last Updated : 25 Feb 2020 12:56 PM

மறுபடியும் வருவார்; தாஜ்மஹாலின் வரலாற்றைக் கேட்டதும் ட்ரம்ப் நெகிழ்ந்துவிட்டார்: சுற்றுலா வழிகாட்டி வியப்பு

ஆக்ராவில் இருக்கும் உலக அதியசங்களி்ல் ஒன்றான தாஜ்மஹாலின் வரலாற்றைக் கேட்டதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவரின் மனைவி மெலானியாவும் நெகிழ்ந்துவிட்டனர் என்று சுற்றுலா வழிகாட்டி நிதின் குமார் வியப்புடன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜார் குஷ்னர் ஆகியோர் 2 நாள் பயணமாக நேற்று வந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், அதன்பின் விமானம் மூலம் ஆக்ராவுக்குச் சென்றார்.

ஆக்ராவில் இருக்கும் காதல் நினைவுச் சின்னம், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஏறக்குறைய ஒரு மணிநேரத்துக்கும் மேலாக சுற்றிப் பார்த்தார். அதிபர் ட்ரம்ப்புக்கும், அவரின் மனைவி மெலானியாவுக்கும் ஆக்ராவைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர், வழிகாட்டி நிதின் குமார் விளக்கினார்.

உலகின் சக்திவாய்ந்த மனிதர் அதிபர் ட்ரம்ப்பிடம் உரையாடியது குறித்து நிதின் குமார் நிருபர்களிடம் கூறுகையில், " உலகின் சக்திவாய்ந்த நாட்டின் தலைவருடன் பேசும்போது எனக்குப் பதற்றமாக இருந்தது. முற்றிலும் பளிங்குக் கற்களால் ஆன தாஜ்மஹாலை அதிபர் ட்ரம்ப் பிரமிப்புடன் பார்த்தார். அவர் பேசிய முதல் வார்த்தையே "என்னால் நம்பவே முடியவில்லை" என்பதுதான்.

தாஜ்மஹால் முன் அதிபர் ட்ரம்ப் தனது மனைவி மெலானியுடன் அளித்த போஸ்

இந்த தாஜ்மஹால் கதை குறித்து என்னிடம் கேட்டார்கள். நான் தாஜ்மஹால் எப்போது கட்டப்பட்டது, கட்டப்பட்டதற்கான பின்னணி என்ன, உள்ளே என்ன நிறைந்திருக்கிறது என்பதைத் தெளிவாகவும், விளக்கமாகவும் தெரிவித்தேன். தாஜ்மஹால் குறித்த கதை அனைத்தையும் உன்னிப்பாகக் கேட்ட அதிபர் ட்ரம்ப் உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ந்துவிட்டார்.

குறிப்பாக ஷாஜஹான், மும்தாஜ் மஹால் குறித்த கதையைக் கேட்டதும் அதிபர் ட்ரம்ப்பும், அவரின் மனைவி மெலானியாவும் நெகிழ்ந்துவிட்டார்கள். ஷாஜஹானை அவரின் மகன் அவுரங்கசீப் சிறையில் அடைத்து வைத்திருந்தது, மும்தாஜ் சமாதிக்கு அருகே புதைத்தது போன்ற கதைகளைக் கேட்டதும் ட்ரம்ப் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார்.

தாஜ்மஹால் வழிகாட்டி நிதின் குமார் சிங்

இந்தக் கதையைக் கேட்டதும் அதிபர் ட்ரம்ப்பும், அவரின் மனைவி மெலானியாவும் சிறிதுநேரம் மவுனமாக இருந்தார்கள். தாஜ்மஹாலை எவ்வாறு பராமரிக்கிறோம், களிமண் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்யப்பட்டது என்பதை ஆர்வமாகக் கேட்டறிந்தார்கள்.

மும்தாஜ் இறந்த பின் கடந்த 1631-ம் ஆண்டுக்குப் பின் தாஜ்மஹால் கட்டப்பட்டது என்று தெரிவித்த பின் அதை நாம் பராமரிக்கும் விதத்தைக் கண்டு வியப்படைந்தார்கள். தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டு அதிபர் ட்ரம்ப், மெலானியா இருவரும் புறப்படும் முன் மீண்டும் ஒருமுறை தாஜ்மஹாலைப் பார்க்க இருவரும் வருவோம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தனர்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x