

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்ததாக எழுந்த புகாரின் பேரில் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கும், மாநில டிஜிபி-க்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாத இறுதியில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது போலீஸார் சிலர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாகப் புகார் எழுந்தது.
பல்கலைக்கழக வளாகத்திலிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதோடு மாணவர்களையும் தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இது தொடர்பாக முகமது அக்ரம் கான் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த பொதுநல வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணை அறிக்கையில், "போராட்டத்தை ஒடுக்குகிறோம் என்ற போர்வையில் அத்துமீறிய காவலர்கள் மீது உத்தரப் பிரதேச காவல்துறை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற போராட்டங்களை சமாளிப்பது எப்படி என்பது குறித்து காவல்துறையினருக்கு சிறப்புப் பயிற்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
மனித உரிமைகள் ஆணையப் பரிந்துரையின்படி, மாநில தலைமைச் செயலர், டிஜிபி, சிஆர்பிஎஃப், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் காயமடைந்த மாணவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் தாக்குதலில் படுகாயமடைந்த 6 மாணவர்களுக்கும் உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.