

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகருக்காக விவசாய நிலங்களை அபகரிக்க வேண்டாம் என்று பிரபல தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் ஆந்திர அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி உருவாக உள்ளது. இதற்கான பணிகள் வரும் விஜய தசமி அன்று தொடங்கப்படுகிறது. அமராவதி நகருக்காக குண்டூர் - விஜயவாடா இடையே 29 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்தப் பகுதியில் இதுவரை 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விவசாயிகள் தாமாக முன்வந்து வழங்கியதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. மேலும் வனத்துறைக்கு சொந்தமான 15 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆயினும் மேலும் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலங்களை நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் விரைவில் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் பவன் கல்யாண் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தலைநகருக்காக கிருஷ்ணா நதியோரம் மிகவும் செழிப்பான விளை நிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரிக்க வேண்டாம். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் மீண்டும் ஒருமுறை பரிசீலிக்க வேண்டும். உண்டவல்லி, பெனுமாகா, பேதபூடி ஆகிய பகுதிகள் மிகவும் செழிப்பான விவசாய நிலங்களை கொண்டவை. இப்பகுதிகளில் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது. மாநில வளர்ச்சிக்காக விவசாயிகள் நஷ்டமடைய வேண்டுமா என அரசு யோசிக்க வேண்டும். இன்னும் 2 நாட்களில் இது குறித்து திட்டவட்டமான அறிக்கையை அரசு வெளியிடாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்த வேண்டி வரும். இவ்வாறு பவன் கல்யாண் கூறியுள்ளார்.