

உலகிலேயே மிகப்பெரிய ஸ்டேடியம் என்ற புகழை அடைந்துள்ள மோட்டேரா ஸ்டேடியம் 4 ஆண்டுகளில் அதிநவீனமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற மோட்டேரா ஸ்டேடியம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஸ்டேடியத்தின் கட்டுமானப் பணியை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டது. மோட்டேராவில் ஏற்கெனவே இருந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணியை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியது.
மிகச்சிறந்த கட்டிட நிபுணர்களைக் கொண்டு ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. பகலிரவு போட்டிகளின்போது 4 திசைகளில் இருந்தும் மின்னொளி பரவும். அப்போது கிரிக்கெட் வீரர்களின் நிழல் 4 திசைகளிலும் விழும். இதைத் தடுக்க எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மிகச்சிறந்த மழைநீர் வடிகால் வசதி ஸ்டேடியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரமான குடிநீர் வசதியும், மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் வசதியும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான எஸ்.என்.சுப்பிரமணியம் கூறும்போது, “சமீப காலங்களில் நாங்கள் மேற்கொண்ட மிகுந்த சவாலான திட்டங்களில் இதுவும் ஒன்று. மிகப்பெரிய, உயரமான, நீண்ட, நவீனமான ஸ்டேடியம் என்று இதைக் கூறலாம் என்றார். ரூ.800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் 1,10,000 ரசிகர்கள் அமரலாம். இதனால் இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானம்தான் தற்போது உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமாக இருந்து வருகிறது. அதில் 90,000 ரசிகர்கள் அமரலாம். அதை முறியடிக்கும் விதமாக அகமதாபாத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் 70 கார்ப்பரேட் பாக்ஸ், நான்கு உடை மாற்றும் அறைகள், ஒரு கிளப் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் உள்ளன. மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த ஆஸ்திரேலிய நிறுவனமான பாப்புலஸேதான் இந்த மோட்டேரா மைதானத்தையும் வடிவமைத்துள்ளது.
குஜராத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைய வேண்டும் என பிரதமர் மோடியின் கனவாகும். அது தற்போது நனவாகியுள்ளது.
மைதானத்தில் உள்ளரங்க பயிற்சி ஆடுகளங்கள், நவீன ஊடக அரங்கம், 3000 கார்கள், 10 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மெட்ரோ ரயில் இணைப்பு, 2 சிறிய கிரிக்கெட் மைதானம், இதர விளையாட்டு மைதானங்கள் அமைந்துள்ளன.