டெல்லி கலவரம்: அமித் ஷா ராஜினாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்; ராகுல் காந்தி காட்டம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா | கோப்புப் படம்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா | கோப்புப் படம்.
Updated on
1 min read

டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏதும் பதில் அளிக்காமல் மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் வடகிழக்குப் பகுதியான மஜ்பூர், ஜாப்ராபாத், சாந்த்பாக், கர்தாம்பூரி ஆகிய பகுதிகளில் சிஏஏ எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் 2-வது நாளாக மோதிக்கொண்டனர்.

இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர்.

டெல்லியில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்கக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்தியிருந்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ட்விட்டரில் டெல்லி கலவரத்தையும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்காத டெல்லி போலீஸாரையும் சாடியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், "டெல்லியில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் வேதனைப்படுத்துகின்றன. அவை மிகவும் கண்டிக்கத்தவை. அமைதியான போராட்டம்தான் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது. வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. எந்தவிதமான ஆத்திரமூட்டல் நிகழ்ந்தாலும் டெல்லி மக்கள் அதை எதிர்த்து, அன்பையும் பொறுமையையும் காட்ட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், "டெல்லி போலீஸார் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கத் தவறிவிட்டார்கள். டெல்லி முதல்வர் தனது பொறுப்பை முற்றிலும் உதறிவிட்டார். உள்துறை அமைச்சர் அமைதியாக இருக்கிறார். இந்தக் கலவரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். அரசியல் பழிபோடும் இந்த விளையாட்டால் டெல்லி மக்கள்தான் விலை கொடுக்கிறார்கள்.

டெல்லியில் பல்வேறு இடங்களில் நடக்கும் வன்முறையால், ஒரு காவலர் உயிரிழந்தது வருத்தமானதாகும். தலைநகரில் வசிக்கும் மக்கள் அமைதியாகவும், சட்டம்- ஒழுங்கிற்கு மதிப்பளிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in