''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பேச்சு

உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா : கோப்புப் படம்.
உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா : கோப்புப் படம்.
Updated on
1 min read

ஜனநாயகத்தில் எதிர்ப்பை அடக்க நினைக்கும் எந்த முயற்சியும் பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நசுக்குவதாகும். அரசுகள் எப்போதும் சரியானவை அல்ல. அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகள் அல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஜனநாயகமும், எதிர்ப்பும் என்ற பெயரில் கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பங்கேற்றார்.

அவர் பேசியதாவது:

''பெரும்பான்மைவாதம் என்பதே ஜனநாயகத்துக்கு எதிரான கூற்றுதான். நாட்டில் சமீபத்தில் நடக்கும் (சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போராட்டம்) சில சம்பவங்களாலும், மக்கள் அதில் பங்கேற்பதாலும் அவர்களை தேச விரோதிகள் என்று சொல்கிறார்கள். ஏனென்றால், போராட்டத்தில் பங்கேற்பவர்கள் எல்லாம் அரசுக்கு எதிராக இருக்கிறார்கள்.

ஒரு கட்சி தேர்தலில் 51 சதவீதம் வாக்குகள் பெற்றுவிட்டால், மீதமுள்ள 49 சதவீதம் வாக்குகள் பெற்ற கட்சியினர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாய்மூடி இருத்தல் என்பதல்ல. ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது, பங்கெடுக்கலாம். அரசுகள் எப்போதும் சரியானவை அல்ல.

எப்போதெல்லாம் சித்தாந்தங்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறதோ அப்போது எதிர்ப்பு உருவாகும். ஜனநாயகத்தில் கேள்வி கேட்பது என்பது உள்ளார்ந்த பகுதி.

அமைதியான முறையில் எத்தனை காலம் வேண்டுமானாலும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்த உரிமை உண்டு. அரசை எதிர்ப்பது என்பது தேசவிரோதம் என்று அப்பட்டமாக முத்திரை குத்துவது ஜனநாயக இயக்கத்தை வேண்டுமென்றே நிறுத்துகிறது.

குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்போதுதான் ஜனநாயகம் வெற்றி பெற்றது என்று கருத முடியும். எதிர்ப்பு, மாற்றுக்கருத்து என்பது ஜனநாயகத்தில் முக்கியமானது. அதை அங்கீகரித்து, ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாட்டைச் சிறந்த முறையில் வழிநடத்திச் செல்ல வழிகாட்டும்.

தேசவிரோத வழக்கு ஒருவர் மீது சுமத்தப்பட்டால் அவருக்கு ஆதரவாக வாதிடமாட்டோம் என வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் போட்டதை நான் கண்டிக்கிறேன். இது சட்ட நெறிமுறைகளுக்கு விரோதமானது

சில நேரங்களில் சில தீர்ப்புகள் மீது எனக்கு உடன்பாடில்லை. அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால், நான் தீர்ப்பு வழங்கும் அமர்வில் இருந்துவிட்டால், நீதியின் அடிப்படையில்தான் செயல்படுவேன்.

நீதித்துறை எப்போதும் அச்சமற்று, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். எதிர்க்கவும், மாற்றுக்கருத்து கூறவும் உரிமை இருக்கிறது, விமர்சிக்கக்கூட உரிமை இருக்கிறது. நீதித்துறை கூட விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல''.

இவ்வாறு தீபக் குப்தா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in