Last Updated : 24 Feb, 2020 06:15 PM

 

Published : 24 Feb 2020 06:15 PM
Last Updated : 24 Feb 2020 06:15 PM

இந்தியாவை நேசிக்கிறது அமெரிக்கா: தாஜ்மஹாலைப் பார்த்த பின் ட்ரம்ப் கருத்து

இந்தியாவை அமெரிக்கா விரும்புகிறது என்று உலக அதியசங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பார்த்த பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று வந்தார். அகமதாபாத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்த ட்ரம்ப், அங்கிருந்து விமானம் மூலம் கேரியா விமானத் தளத்துக்கு வந்தார்.

கேரியா விமானத் தளத்தில் இருந்து 30-க்கும்மேற்பட்ட கார்கள், பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க தாஜ்மஹால் அருகே இருக்கும் ஓபராய் அமரவிலாஸ் நட்சத்திர ஹோட்டலுக்கு ட்ரம்ப் சென்றார். தாஜ்மஹால் அருகே 15 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் அமெரிக்க, இந்திய தேசியக் கொடியை ஏந்தி அதிபர் ட்ரம்ப்பை வரவேற்றனர்.

அதிபர் ட்ரம்ப்பை வரவேற்று சாலையெங்கும் மிகப்பெரிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பிரதமர் மோடி, ட்ரம்ப் சேர்ந்திருக்கும் பதாகைகளும் வைக்கப்பட்டன. தாஜ்மஹாலுக்கு வரும் பாதை முழுவதும் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அமெரிக்க அதிபர் வருகையையொட்டி நண்பகலுக்குப் பின் மக்கள் யாரையும் தாஜ்மஹாலைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

அதிபர் ட்ரம்ப் , அவரின் மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜார் குஷ்னர் ஆகியோர் தாஜ்மஹாலுக்கு வந்து அதன் அழகைக் கண்டு ரசித்தனர்.

அதிபர் ட்ரம்ப்பும், அவரின் மனைவி மெலானியாவும் தாஜ்மஹால் நடைபாதையில் கை கோத்து நடந்து அதன் அழகை ரசித்தனர். தாஜ்மஹாலின் பெருமைகள், வரலாற்றுச் சிறப்புகள் ஆகியவை குறித்து ட்ரம்ப்புடன் வந்த மொழிபெயர்ப்பாளர் விளக்கிக் கூறினார்.

தாஜ்மஹாலின் அழகை ரசித்த அதிபர் ட்ரம்ப், தனது மனைவி மெலானியாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ட்ரம்ப் மகள் இவாங்கா, அவரின் கணவருடன் தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன்பின் ட்ரம்ப் ட்விட்டரில் இந்தியில் பதிவிடுகையில், "நானும் எனது மனைவியும் 8 ஆயிரம் மைல்கள் இந்த உலகைச் சுற்றி இருக்கிறோம். இந்திய மக்களுக்கு நாங்கள் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறோம். அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது. அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது. அமெரிக்க மக்கள் எப்போதும் இந்தியாவுக்கு உண்மையாகவும், நட்பாகவும் இந்திய மக்களுடன் இருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x