

அயோத்தியில் மசூதிக்காக உத்தரப் பிரதேச அரசு வழங்கும் 5 ஏக்கர் மாற்று நிலத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது உ.பி.யின் சன்னி மத்திய வக்பு வாரியம்.
இது தொடர்பாக வக்பு வாரியம் அறக்கட்டளை ஒன்றை அமைத்து நிலத்தை பராமரிக்க கூட்டம் ஒன்றில் முடிவெடுத்துள்ளது.
அயோத்தியாவின் சோஹோவால் பகுதியில் தன்னிபூர் கிராமத்தில் உ.பி.அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இது அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலை அருகே உள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் இதற்கான கடிதத்தை உ.பி.அரசு வக்பு வாரியத்திடம் அளித்தது.
இங்கு மசூதி, நூற்றாண்டு கால இந்திய-இஸ்லாமிய பண்பாடு குறித்த வேலைப்பாடுகள் மையம், இந்திய-இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வு மையம், ஒரு மருத்துவமனை, ஒரு நூலகம் ஆகியவற்றை கட்ட முடிவெடுத்துள்ளதாக வாரியத்தின் தலைவர் ஸுபர் பரூக்கி தெரிவித்தார்.
அதேபோல் மசூதியின் அளவு என்ன, எவ்வளவு பரப்பை அது ஆக்ரமிக்கும் போன்றவை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றார் அவர்.
கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்குத் தீர்ப்பில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் அயோத்திக்குள் 5 ஏக்கர் மாற்று நிலம் மசூதிக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.